சிட்டுக் குருவிக்கு நேர்ந்த கதி ?

இணையத்தில் படித்த கதை .....



google image


ஒரு பெரிய மரம். சிட்டுக் குருவிகள் கும்மாளம்  அடித்துக் கொண்டிருந்தது. அருமையான வசந்த காலம் அது..  கும்மாளத்திற்கு சொல்ல  வேண்டுமா ?

சுகமான காலை  நேர வெயிலில் , உயரத்தில் கருடன்  ஒன்று பறந்துக் கொண்டிருந்தது.  அதன் கண்களிலும்  சிட்டுக் குருவிகளின் கும்மாளம் கண்ணில் பட்டது.

சட்டென்று, கருடன் கண்ணில்  அவரும்  பட்டார். இது அவராயிருக்குமோ...?  என்கிற சந்தேகத்துடன்  உற்றுப்  பார்த்தது. அவர் வாகனத்தைப்  பார்த்ததும் சந்தேகம்  தெளிவுற்றது கருடனுக்கு.

ஆமாம்......அவரேதான்.....எமதர்ம ராஜா .

எருமை மேல் உல்லாசமாய் சவாரி செய்து யார் உயிரை வாங்கப் போகிறாரோ   என்று நினைத்துக் கொண்டே கருடன் பறந்தது. அவர் கண்ணில் நாம் படாமலிருந்தால் போதும்  என்று நகரப் போனது. 

ஆனால் ஆர்வம் விட்டால் தானே ! யாருக்காக இப்படி  செல்கிறார் என்று பார்க்க ஆரம்பித்தது கருடன்.

சிட்டுக் குருவிகள் கும்மாளம் செய்து கொண்டிருந்த மரத்தின் அருகில்  வந்ததும்  எமன்  எருமையின்  லகானை  இழுத்து நிறுத்தி விட்டார்.

நிறுத்தி விட்டு வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தார் .
கருடனுக்கு  ஆர்வம் தாங்கவில்லை. சற்றே நெருங்கி வந்து யாரை வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார் என்று அருகில் பறந்து வந்து, யமன் பார்த்தத் திசையை பார்த்தது.

ஐயோ ! இந்த அழகான மகிழ்ச்சியான சிட்டுக் குருவி யமனின் பார்வையில் மாட்டிக் கொண்டதே.  என்ன  குஷியாகக் கும்மாளம் அடிக்கிறது அந்த சிட்டு., தனக்கு நேரப் போகும் அபாயத்தை அறியாமல் எப்படியாவது இந்த சிட்டுக் குருவியை எமனிடமிருந்துக்  காப்பாற்றியாக வேண்டுமே. திருமாலின்  வாகனமாய் இருக்கும் என்னால்  அதை  செய்ய முடியவில்லை என்றால்  ....வேறு யாரால் முடியும் என்று  நினைத்த கருடன்

மேலேயிருந்து  ஜிவ்வென்று இறங்கி வந்து  சிட்டுக் குருவியை  அலாக்காக தூக்கிக் கொண்டு  மேலேறியது. மற்றக் குருவிகளெல்லாம்  கீச் கீச்.....என்று   கத்தத்  தொடங்கின......

சிட்டுக் குருவியுடன் மேலே பறக்கத் தொடங்கிய கருடன் , பல ஆயிரம் மைல்களுக்கு  அப்பால்  சென்று ஒரு மரப் பொந்தில் சிட்டுக் குருவியை  பத்திரமாக  விட்டது . ஒரு உயிரைக் காப்பாற்றிய மகிழ்ச்சியில் மீண்டும் கருடன் உயரே பறக்கத்  தொடங்கியது.

கருடனின் மகிழ்ச்சி சில நிமிடங்கள் கூட நீடிக்கவில்லை.

ஜிவ்வென்று  மேலே  ஏறத் தொடங்கிய போது , கருடன் காதுகளில் குருவியின் பதட்ட  கீச்... கீச்....  சத்தம்  கேட்டது. குனிந்து பார்த்த கருடனுக்கு  அதிர்ச்சி காத்திருந்தது .


சிட்டுக்குருவியின்  பாதுகாப்புக் கருதி எந்தப் பொந்தில்  கருடன் விட்டு வந்ததோ, அதே பொந்திலிருந்து , பாம்பு ஒன்று  குருவியைப் பார்த்து, சீறிக்  கொண்டு வந்து  குருவியைக் கொன்று முழுங்கிக் கொண்டிருந்தது. அப்பொழுது குருவி கொடுத்த  அபாயக் குரல் தான் அது.

பார்த்துக் கொண்டிருந்த கருடன், மிகவும்  சோகமானது. செய்வதறியாது திகைத்தது. இனி பாம்புடன் சண்டைப் போட்டு ஒன்றும் ஆகப் போவதில்லை. குருவி செத்தது செத்தது தான்  என்று  நினைத்துக் கொண்டு கனத்த மனத்துடன் பறக்கத் தொடங்கியது.

தன்னை யாரோ பார்ப்பது உணர்ந்து, கருடன்  தலையைத் திருப்பப் பார்க்க , யமன் கருடனைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

கருடனுக்கு வந்த கோபத்திற்கு அளவேயில்லை. யமனைப் பார்த்து," என்னையும் சிட்டுக் குருவி என்று நினைத்து விட்டீர்களோ ? நான் திருமாலின் வாகனம் என்பதை மறக்க வேண்டம். உங்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது . " என்று கருடன் கோபத்துடன் கத்த,

யமன் திருவாய் மலர்ந்தார் ," நான் உன்னை எந்த நோக்கத்துடனும் பார்க்கவில்லை. அந்த சிட்டுக் குருவி  பாம்பின் வாயில் அகப்பட்டு  உயிர் துறக்க வேண்டும் என்பது விதி. ஆனால் சிட்டுக் குருவிக்கும், பாம்பிற்கும் இருக்கும் இடைவெளி பல ஆயிரம் மைல்கள். நேரமோ நெருங்கிக் கொண்டிருந்தது. ஒரு சில நிமிடங்களே பாக்கி இருந்த நிலையில்  இது எப்படி நிகழப் போகிறது என்று  யோசித்துக் கொண்டிருக்கும் போதே, நீ எங்கிருந்தோ பறந்து வந்து, குறித்த நேரத்தில்  அந்த நிகழ்வு நடக்க உதவினாய்.  அதை நினைத்து வியந்து கொண்டிருந்தேன்.  வேறொன்றுமில்லை." என்று சொல்லியபடியே யமதர்ம ராஜா அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்.

விதியை  வெல்ல யாராலும் முடியாது. திருமாலின் வாகனமாயிருந்தால் தான்  என்ன! என்கிற பேருண்மை கருடனுக்கும் விளங்கியது.

திருமாலின் டிரைவருக்கே  விதியை மாற்றும் சக்தி இல்லையென்றால்  நாம் எம்மாத்திரம்.....

Comments

Popular posts from this blog

யுத்தம் நடந்ததா? இல்லையா?